Sunday, February 2, 2014

மண் அகழ்விற்கெதிராக பொங்கியெழுந்த பேசாலை மக்கள் - பொலிஸாரின் தலையீட்டால் அமைதியாகினர்!


மன்னார் பேசாலை உள்ளடங்களாக மன்னார் தீவுப்பகுதிகளில் கரையோறப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மண் அகழ்வினை கண்டித்தும் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் கோரி பேசாலை கிராம மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பேசாலை பகுதியில் எதிர்ப்பு பேரணியினை மேற்கொண்டுள்ளனர்.




பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் திருப்பலி நிறைவடைந்த நிலையில இன்று காலை 8.30 மணியளவில்; அவ்விடத்தில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு பேரணியை மேற்கொண்டனர்.


பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்திற்கு முன் ஆரம்பமான பேரணி பேசாலை பஸார் பகுதியில் நிறைவடைந்த நிலையில் அப்பகுதியில் உள்ள 'புனித ஞானப்பிரகாசியார்' சிலைக்கு முன்பாக ஒன்று கூடி பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினர்.


இந்த நிலையில் தலைமன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் உற்பட தலைமன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தார்.

-இதே வேளை வடமாகாண சபை உறுப்பினர்கலான சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா,வைத்தியகலாநிதி என்.குணசீலன்,மன்னார் பிரதேச சபையின் தலைவர் மாட்டின் டயேஸ்,மன்னார் பிரதேச சபை உறுப்பினர் கொன்சால் குலாஸ் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.


தலைமன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.


-இதன் போது குறித்த பகுதிகளில் இடம் பெறுகின்ற சட்டவிரோதமான மண் அகழ்வு குறித்து கிராம மக்கள் சார்பாக உடனடியாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுமாறும்,இப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் எடுப்பவர்களுக்கு எதிராக தான் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் கோரிக்கை விடுத்தார்.


இந்த நிலையில் காலை 10 மணியளவில் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. குறித்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த அதிகலவான சிறுவர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment