
ஆனால், எதிர்த் தரப்புகள் இந்த விடயத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றன. இரு தரப்பு வாதமாக இந்த எலும்புக்கூடுகள் ஐ.நாவில் ஆர்ப்பரிக்கப்போகின்றன. இதில் சீனா, ரஷ்யா போன்ற சிறீலங்காவின் நட்பு நாடுகளைத் தாண்டி தமிழர்களின் நியாயம் எந்தளவு எடுபடப்போகின்றது என்பதும் - இறந்தவர்களுக்கு எங்ஙனம் நீதி கிடைக்கப்போகின்றது என்பதும் கேள்விக்குறியான விடயமாகவே உள்ளது.
தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். இந்து மதத்தின் அடையாளங்களை இழப்பதற்கு தமிழ் மக்கள் என்றுமே தயாராக இருந்ததில்லை. இனியும் என்றுமே அவர்கள் தயாராக இல்லை. சித்தர்களாலும் ஞானிகளாலும் வளர்க்கப்பட்ட இந்துமதத்தின் அடையாளங்களை நாம் இழந்தால் எமது தமிழ் மொழியின் அடையாளங்களை நாம் இழந்தர்களாவோம்.
ஏனெனில், இந்து சமயத்தில் உள்ள பிரதான சமயமான சைவ சமயம் தமிழுடன் இரண்டறக் கலந்துள்ளது. இந்த சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக சிவபெருமான் வர்ணிக்கப்படுகின்றார். இந்தச் சிவபெருமானே மன்னார் புதைகுழி உள்ள திருக்கேதீஸ்வரத்தில் கோயில் கொண்டு எழுத்தருளியிருக்கின்ற சிவன் ஆவார்.
நத்தார் படை ஞானன் பசு ஏறிந்நனை கவுள் வாய்மத்தம் மதயானை உரி போர்த்தமணவாளன் பத்து ஆகிய தொண்டர் தொழுபாலாவியின் கரைமேல், ‘செத்தார் எலும்பு அணிவான் திருக்கேதீச்சரத்தானே’ இது சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரங்களில் ஒன்று. திருக்கேதீஸ்வரத்திற்கு வர முடியாத சுந்தரர் இந்தியாவில், தமிழகக் கரையில் இராமேஸ்வரத்தில் இருந்தவாறு திருக்கேதீஸ்வர நாதரைப்பற்றிப் பாடிய தேவாரம் இது.
திருக்கேதீஸ்வரத்திலுள்ள சிவபெருமான் செத்தவர்களின் எலும்பை அணிபவர் என்று கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் ஊகித்திருக்கின்றார். நாங்கள் எமது ஆன்மீக உண்மைகளை எப்போதும் புறந்தள்ள முடியாது. எமது மதத்தில் உள்ள உண்மைக் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இன்றைய நவீன யுகத்தில் பொதுவாகவே மதக் கருத்துக்கள் எங்களில் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தும். ஆலயங்கள் அவசியமற்றவை என்று எண்ணத் தோன்றும்.
ஆனால், சிறீலங்காவின் ஆட்சி பௌத்த மதத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றதை நாங்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். இந்து மதம் தமிழ் இனத்தின் அடையாளங்களில் ஒன்று. அடையாளங்களைத் தொலைக்கின்ற எந்தவொரு இனமும் நிலைத்து நிற்க முடியாது. அந்த வகையில் நாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்ந்தாலும் தாயகத்தில் வாழ்ந்தாலும் இந்த அடையாளங்களையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும்.
திருக்கேதீஸ்வரம் இந்துத் தமிழ் மக்களின் புனித பூமி. இங்குள்ள திருக்கேதீஸ்வரர் ஆலயம் பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்டது. இந்தியாவின் மதுரையில் வாழ்ந்த சம்பந்தரும், சுந்தரரும் இராமேஸ்வரத்தில் நின்றவாறு திருக்கேதீஸ்வரத்திலுள்ள சிவபெருமானின் சிறப்புக்களைப் போற்றி பதிகங்களைப் பாடியிருக்கின்றனர். இதிலே சுந்தரர் மேற்படி ‘நத்தார் படை ஞானன் பசு...’ என்ற பதிகத்தின் இறுதியில் ‘செத்தார் எலும்பு அணிவான் திருக்கேதீச்சரத்தானே’ என்று பாடியிருக்கின்றார்.
இறந்தவர்களுடைய எலும்புகளை அணிகின்ற சிவபெருமானே... என்று சுந்தரர் சிவனை விழிக்கின்றார். சிவபெருமான் சுடலையில் நடனமாடுபவர் என்றும் வைரவர் வடிவத்தில் எலும்புகளை மாலையாக அணிந்தவர் என்றும் புராணக் கதைகளில் கூறப்பட்டிருக்கின்றது. சிவபெருமான் அரக்கர்களைக் கொன்றுவிட்டு அவர்களின் எலும்புகளை மாலையாக அணிபவர் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. அந்தக் கதையை நாம் இன்று நிஜயமாகவே பார்க்கக்கூடிய நிலை ஒன்றை சிங்களக் காடேறிகள் ஏற்படுத்தித் தந்திருகின்றனர். ஏதுமறியாக அப்பாவிகளைக் கொன்று அவர்களின் எலும்புகளால் திருக்கேதீஸ்வர நாதருக்கு சிங்களச் சேனை மாலை அணிவித்திருக்கின்றது. மாபெரும் அரக்கத்தனத்தைப் புரிந்திருக்கின்றது.
மன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வரம் என்ற புனிதப் பிரதேசம் 1997 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடிவடையும் வரை சிறீலங்கா படையினரின் பூரண கட்டுப்பாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக இருந்தது. மன்னார் தொடக்கம் வட பகுதின் பல இடங்களிலும் படையினரால் கைது செய்யப்படுகின்ற பல இளைஞர், யுவதிகள் விசாரணைகளுக்காக இங்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம் என்று பலரும் தெரிவிக்கின்றார்கள்.
விசாரணைக்காக கொண்டுசெல்லப்படுபவர்கள் திரும்புவது என்பது அரிதான விடயம். விசாரணை என்று படையினரால் கொண்டுசெல்லப்பட்ட அனைவரும் திரும்பியிருந்தால் இன்று காணாமற்போனோர் போராட்டங்கள், விசாரணைகள் எதுவும் தேவைப்பட்டிருக்காது. அன்று கடத்தப்பட்டு காணாமற்போனவர்களில் பல நூற்றுக்கணக்கானோர் திருக்கேதீஸ்வரம் இராணுவ முகாமில் வைத்துக் கொலை செய்யப்பட்டு அங்கு விசேடமாக அமைக்கப்பட்ட புதைகுழியில் போடப்பட்டு மூடப்பட்டுள்ளமை தற்போதுதான் அம்பலத்திற்கு வந்துள்ளது.
திருக்கேதீஸ்வரம் என்ற புராதன ஆலயம் பல வருடங்களாக பூசைகள் இன்றி காடுபோன்று மாறியிருந்தது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு பின்னர் 2005 ஆம் ஆண்டளவில் அங்கு பூசை வழிபாடுகளை மேற்கொள்ள படையினர் அனுமதி வழங்கியிருந்தனர். அதுவும் அவர்கள்தான் அழைத்துச் செல்வார்கள். மக்கள் வழிபாடு செய்துவிட்டு இரவுக்குள் வெளியேறிவிட வேண்டும்.
முதற்தடவை இவ்வாறு வழிபாட்டுக்காக சென்ற மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கிருந்த கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான தெய்வ விக்கிரகங்கள் திருடப்பட்டிருந்தன. அதே பெறுமதியான தங்க நகைகள் காணாமற்போயிருந்தன. இவை அனைத்தையும் சிறீலங்கா படையினரே திருடினர் என்பது ஐயத்திற்கிடமின்ற தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அங்கிருந்த அனைத்தையும் திருடிய படையினர், இறுதியில் சிவபெருமானின் கழுத்தில் அப்பாவித் தமிழ் மக்களின் எலும்புகளை மாலையாக அணிவித்தனர்.
ஏராளம் மக்கள் தமது குறைகளைச் சொல்லி அழுது வரம் பெற்ற இந்த தலத்தில் வைத்து தமிழ் மக்கள் கதறக் கதறக் கொல்லப்பட்டனர். சிங்களச் சேனை எமது தமிழ் மக்களை துடிக்கத் துடிக்கச் சித்திரவதை செய்து சாகடித்திருக்கின்றது. தமிழ் இளைஞர், யுவதிகள், சிறுவர்களின் உடலில் ஒட்டுத் துணிகூட இல்லாமல் அவர்களைக் கட்டிப் போட்டுவிட்டு சுட்டும் அடித்தும் காயப்படுத்தி சித்திரவதை செய்து கொன்றிருக்கின்றது.
கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட நிலையில் தற்போது மீட்கப்படுகின்றவர்களின் மண்டையோடுகளில் எத்தனை காயங்கள்..? அந்த மண்டையோட்டு முகங்களில் வெட்டுக் காயங்கள், வெடிப்புக் காயங்கள், ‘ஆஆஆ...’ என்று வாயைப் பிளந்தவாறு எத்தனை மண்டையோடுகள். அடித்து துன்புறுத்தும் போது எந்த உயிரினமும் ‘அம்மா... ஆஆஆ....’ என்றுதானே அலறும். திருக்கேதீஸ்வரத்தில் எமது உறவுகளும் அம்மா என்று அலறியாறே செத்து மடிந்தார்கள். அதுதான் பல எலும்புக்கூடுகளின் வாய்களும் ‘ஆஆஆஆ...’ என்றவாறு இருக்கின்றன.
திருக்கேதீஸ்வரத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கின் எலும்புக்கூடுகளுக்கு இனி விசாரணை சீனாவில். அது மகிந்தவின் நட்பு நாடு. பிணந்தின்னிக் கழுகுகளுக்கு விடுதலை கொடுக்கின்ற தேசம் சீனா. ஆதலால் தான் தமிழ் மக்களின் இரத்தத்தில் குளித்த மகிந்தவை பாதுகாக்க சீனா துடிக்கின்றது. அடிக்கடி ஐ.நாவில் சிங்களச் சேனைகளைக் காப்பாற்றிய சீனா, இன்று மன்னார் எலும்புக்கூடுகளிலிருந்தும் சிங்களச் சேனையைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை மகிந்தருக்கு இருக்கிறது.
ஆனாலும், இந்துத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று இந்துத் தமிழ் மக்கள் நம்புகின்றனர். திருக்கேதீஸ்வர நாதர் கட்டாயம் கொல்வார். தனது புனிதப் பிரதேசத்தில் எமது மக்களைக் கொன்று புதைத்த கயவர்களை கண்காணித்து, கேதீச்சரநாதர் அவர்களைக் கொல்வார். இறை தண்டனையிலிருந்து எவரும் தப்பமுடியாது என்பதை சிங்கள தேசம் கட்டாயம் உணர்ந்துகொள்ளும்.
சிவபெருமான் தக்கனின் யாகத்தை குழப்புவதற்காக சினம்கொண்டு வைரவர் வடிவெடுத்து ஆடினார் என்கிறது புராணம். அங்கிருந்த நாசகாரர்களைக் கொன்று அவர்களின் தலையைக் கொய்து மாலையாக அணிந்தார். இன்று திருக்கேதீஸ்வர நாதர் மண்டையோடுகளை மாலையாக அணிந்துவிட்டார். சிங்களச் சேனை அவருக்கு அணிவித்த மண்டையோடுகளோடு அவர் ஊழித்தாண்டவம் ஆடுவார். அந்த ஆட்டம் ஐந்தாம் கட்ட ஈழப்போராக இருக்கும். அதுவே சிங்களத்தின் முடிவு காலமாகவும் இருக்கும்.
- தாயகத்தில் இருந்து வீரமணி -
No comments:
Post a Comment