Thursday, February 6, 2014

இறுதி யுத்தம் பற்றி பேசும் உரிமை சர்வதேசத்திற்கு கிடையாது - முன்னாள் கடற்படைத் தளபதி

யுத்தத்தில் சில பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் எனினும் திட்டமிட்ட தாக்குதல்களாக கருத முடியாது என இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியும், அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.





அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையில் நடைபெற்று முடிந்த  யுத்தம் தொடர்பில் சர்வதேச நாடுகள் கவலைப்படவோ யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தவோ அவசியமும் கிடையாது.

எனினும் சர்வதேச சமூகம் கூறுவது போல இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. மேலும் படையினர் இன ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலும் எவ்வித உண்மையும் கிடையாது.

யுத்தத்தின் போது  பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்று  நான் கூறவில்லை. எனினும் யுத்தத்தின் போது சில பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் .இருப்பினும் அவை திட்டமிட்ட தாக்குதல்களாக கருதப்பட முடியாது.

எனவே  30 ஆண்டுகளாக இலங்கையில் நீடித்து வந்த யுத்தம் தொடர்பில் கவனம் செலுத்தாது இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் மட்டுமே சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி வருகின்றது.

அன்றைய காலங்களில் மதவழிபாட்டில் ஈடுபட்டு வந்த அப்பாவி சிறுவர் சிறுமியரை பாண் வெட்டுவது போன்று புலிகள் வெட்டிக் கொன்றனர். அப்போது சர்வதேச சமூகம் ஏன் கேள்வி எழுப்பவில்லை.

உள்நாட்டு யுத்தம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியிலான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படும்.  அத்துடன் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment