Thursday, February 6, 2014

எமது உறவுகளினை கொல்ல நாமே இடமளிப்பதா - பொங்கும் அனந்தி!

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது என்பது எங்களுடைய உறவுகளை நாங்களே கொல்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 



யாழ். ஊடக அமையத்தில் நேற்று (06) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

காணமல் போனவர்களை தேடும் போது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த காணமல் போனவர்களுடைய உறவுகள் தற்போது, இராணுவத்தினால் காணமல் போனவர்களுக்கான மரணச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு அச்சுறுத்தப்படுகின்றனர். 

நடந்து முடிந்த இரண்டு ஜெனீவாக் கூட்டத் தொடரிலும் இலங்கை அரசாங்கம் தங்களிடம் காணமல் போனவர்களுடைய பட்டியல் இருக்கின்றது என்றும், அதனை தாங்கள் வெளியிடவுள்ளதாகவும் கூறியிருந்தது. 

ஆனால் பல இடங்களில் உள்ள இரகசிய முகாங்கள் தொடர்பாகவும், காணமல் போனவர்கள் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்தினால் எந்தவிதமான தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. 

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜ.நா மனித உரிமை மாநாடு நடைபெறவுள்ளது. இதனையடுத்து தற்போது புதிது புதிதாக காணமல் போனவர்கள் தொடர்பான அமைப்புக்கள் தோன்றி மக்களை குழப்புகின்ற முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக் குழுவில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று தாங்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பதாக கூறி படிவம் ஒன்றினை மக்களிடம் விநியோகித்துள்ளனர். 

அதனை கொண்டு கிளிநொச்சி நீதிமன்றத்திறத்கும் மாவட்டச் செயலகத்திற்கும் இடையில் உள்ள இராணுவ முகாமில் சென்ற மக்களிடம் மரணச்சான்றிதழ்களை திணிக்க இராணுவத்தினர் முற்பட்டுள்ளனர். 

இதனால் சுதாகரித்துக் கொண்ட மக்கள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர். 

தற்போது குறித்த படிவத்தினைப் பெற்றுக் கொண்ட மக்களை இராணுவத்தினர் தேடி வருகின்றனர். அவர்களிடம் இராணுவத்தினர் காணமல் போனவர்களுடைய மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியும் வருகின்றனர். 

இதுவரை காலமும் தங்களுடைய பிள்ளைகளை பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேடிவந்த உறவுகள் தற்போது மரணச்சாண்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அச்சுறுத்தல் விடப்படும் நிலை காணப்படுகின்றது. 

மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட 7 பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டது என்றும், அவர்களுடைய குடும்பத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கொடுக்கப்பட்டு, அரிசியும் வழங்கப்பட்டுள்ளது. 

ஜெனிவா மாநாடு நடைபெறவுள்ள நிலையில் மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கி அவர்களை மன உளைசலுக்குள் தள்ளும் நடவடிக்கையே தற்போது இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment