
தனது காலம் முழுவதும் இலங்கையில் மாறிவந்த பேரினவாதக் கட்சிகளின் துணைக் குழுக்களைப் போன்று செயற்பட்ட ஈ.பி.டி.பி இன் பிரதான எதிரி தமிழீழ விடுதலை புலிகள். பல்வேறு கொலை முயற்சிகளிலிருந்து மீண்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி பல கோடி பண வளத்தைக் கொண்டுள்ளது.
புலிகளால் பாதிக்கப்பட்டவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கட்சி புலிகளின் அழிவின் பின்னர் எதிரிகளின்றி காணப்பட்டது. இலங்கை இனப்படுகொலை அரசை எதிரிகளாகக் காணாத இக்கட்சி மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும், அழிப்பிற்கும் துணைபோனது.
எதிரிகள் அற்ற நிலையில் ஈ.பி.டிபி சிதைய ஆரம்பித்துள்ளது. தொடர்ச்சியான மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு புலிகளை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டமுடியாத ஈ.பி.டி.பி சிதைவடைந்துகொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக ஈ.பி.டி.பி இன் அலுவலகங்கள் பல மூடப்பட்டன. அதன் முக்கிய உறுப்பினரும் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் நேற்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவருமான டானியல் றெக்ஷியனை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி கொலை செய்ததாக கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதனையடுத்து, மூவரும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, கந்தசாமி கமலேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டினால் கட்சி, தலைமை, அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், அபிமானிகள் யாவருக்கும் எற்பட்டுள்ள அசௌகரியங்களையும், அவமானங்களையும் களையக்கூடிய வகையில் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment